×

பட்ஜெட்டின் கனவு, நாளை முதல் நனவாக வேண்டும்: திட்டங்களை மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்த அமைச்சர், கலெக்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நமது அரசின் கனவு. அது நாளை முதல் நனவாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதனை எடுத்துச் சொல்லும் அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். இது நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை, அனைத்து மக்களுக்குமான சமநீதியையும்-சமநிதியையும் வழங்கித் தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் திமுகவின் அரசானது ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிடவியல் கோட்பாட்டின் அரசு நிர்வாக வடிவமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் செயல்பாட்டின் பயனை நாம் அனைவரும் உடனடியாகவும், நேரடியாகவும் கண்டு வருகிறோம்.

இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருவதாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் இந்தியாவில் தமிழ்நாடு 2வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 விழுக்காடாக இருக்கிறது. மாநிலத்தின் பணவீக்கம் 5.97 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம். புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இப்படி அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உயர்த்தி வருகிறது. அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதே ‘திராவிட மாடல்’ வளர்ச்சியின் இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த வளர்ச்சியின் அடுத்தகட்ட உயர்வை அடையாளம் காட்டுவதாக தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அமைந்திருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன்.

இலக்கை அமைத்துக் கொள்வதுதான் வெற்றிக்கான முதல் படி. இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் பெருங்கனவுகளை மாபெரும் இலக்காகக் கொண்டுள்ளது. சமூகநீதி-கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு-உலகை வெல்லும் இளைய தமிழகம்-அறிவுசார் பொருளாதாரம்-சமத்துவ நோக்கில் மகளிர் நலம்-பசுமைவழிப் பயணம்-தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. குடிசை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது. மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு சொல்லும்-எழுத்தும்-அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது என்பதுதான். ‘’ஆடுகளை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு விவசாயி, ஒரே ஒரு ஆட்டை மட்டும் தோளில் தூக்கிப் போட்டு சுமந்து வருவான். அது காலில் அடிபட்டு நடக்க முடியாத ஆடாக இருக்கும். அதற்குப் பெயர்தான் சமூகநீதி’-என்று சொன்னவர் கலைஞர். அந்த அடிப்படையில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியைத் தருவதன் மூலமாகத் தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை வளர்ச்சிச் செயல்பாட்டைத் தடுக்கப் பார்த்தார்கள். ஆனால் அந்தத் தடைகளையும் வென்று, அனைவர்க்குமான வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. ஏழு பெரும் கனவுகளையும் முழுமையாக நிறைவேற்றும்போது தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக, தலைசிறந்த மாநிலமாகத் திகழும் காலம் விரைந்து ஏற்படும்.
தலைசிறந்த-தொலைநோக்குப் பார்வை கொண்ட-கனிவான-பொருளாதாரச் சமநிலை அறிக்கையை தயாரித்து வழங்கிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டுகிறேன். அவருக்குத் துணையாக இருந்து, பொருளாதார வளத்தைச் சமூகச் சீர்திருத்த வளர்ச்சிக்குப் பயன்படும் வகையிலான அறிக்கையாக அமையக் காரணமாகவும் இருந்த நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிதித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

திராவிட மாடல் ஆட்சி உருவானபோது, “இந்த ஆட்சியானது ஒரு விவசாயிக்கு மழையாகவும், ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும், ஒரு ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும், ஒரு தொழிலதிபருக்கு வளர்ச்சியின் குறியீடாகவும் செயல்படும்” என்று நான் குறிப்பிட்டேன். அப்படித்தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இனியும் அப்படித்தான் செயல்படும் என்பதை நாட்டுக்குச் சொல்லும் அறிக்கை தான் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை. இவை நமது அரசின் கனவுகள் மட்டுமல்ல, நனவாகப் போகும் கனவுகள். நாளை முதல் அனைத்தும் நனவாகும். துறைசார்ந்த அமைச்சர்களும், துறையின் செயலாளர்களும் இந்தத் திட்டங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ அதனை மனதில் வைத்துச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களுக்கும் அறிவிப்புகள் பரந்து விரிந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கான திட்டங்களை மிகமிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

The post பட்ஜெட்டின் கனவு, நாளை முதல் நனவாக வேண்டும்: திட்டங்களை மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்த அமைச்சர், கலெக்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,CHENNAI ,Finance Minister ,Thangam Tenara ,M. K. Stalin ,Tamil Nadu ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...